மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்ரஹள்ளியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சிறுமியை தட்ரஹள்ளி அருகே உள்ள சோப்பனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதப்பன் (வயது 47) என்பவர், அருகில் உள்ள மாந்தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த சம்பவம் கடந்த 25.8.2018 அன்று நடந்தது.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்குப்பதிவு செய்து மாதப்பனை கைது செய்தார். கைதான மாதப்பன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மாதப்பனுக்கு, போக்சோ பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும், மிரட்டிய குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.