வியாபாரி மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் கிறிஸ்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துராஜ் சிலரிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துராஜ் தற்போது தலைமறைவாகி விட்டார். இந்நிலையில்கிறிஸ்துராஜ் மனைவியின் சகோதரரான சஜினி என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் வியாபாரம் நடத்தி வருகிறார்.
இதனால் பணத்தை இழந்தவர்கள் சஜினியிடம் சென்று கிறிஸ்துராஜ் எங்கே என்று கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த அவர்கள் சஜினியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து சஜினி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகம்மது, சுல்தான், ஹூசைன், ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.