சேலத்தில் காவலர் கொடூரமாக தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் சேலம் சரக டிஐஜி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. மேலும் சேலம் சரக டிஐஜிக்கு ஒன்றையும் அனுப்பியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட கடுமையான வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.