19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
இதுவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை என்பதால் இம்முறை அந்த வரலாற்றை வெஸ்ட் இண்டீஸ் அணி மாற்றியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடையே எழுந்தது. மழைக் காரணமாக இப்போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 35.4 ஓவர்களில் 179 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஜேக் ஃபிரசர் மெக்கர்க் 84, விக்கெட் கீப்பர் பட்ரிக் ரோவ் 40 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெடன் சீலஸ் நான்கு, மேத்யூ ஃபோர்டே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 180 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததாலும், 46 ஆவது ஓவரின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 25 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 92 ரன்களை எடுத்து ரன்குவிப்பில் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆல்ரவுண்டர் யீம் யங் தனது சிறப்பான ஆட்டத்தால் கரைசேர்த்தார். அவர், 69 பந்துகளில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் என 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இதன் மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றிபெற்று வரலாற்றை மாற்றியுள்ளது. முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 1988, 1998, 2000, 2002, 2002, 2006, 2014 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது
இப்போட்டியில் பவுலிங்கில் ஒரு விக்கெட்டும் பேட்டிங்கில் 61 ரன்களும் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு துணையாக இருந்த யீங் யங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.
WINNER!
Nyeem Young's booming six As voted for by you, yesterday's player of the match also wins the @Nissan Play of the Day for his Day 2!#U19CWC | #FutureStars pic.twitter.com/k6CC1GGjtV
— ICC (@ICC) January 19, 2020