மெக்சிகோவில் போதை மருந்து கும்பல்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் போதை மருந்து வர்த்தக தலைமையிடமாக மெக்சிகோ செயல்பட்டு வருகிறது. மேலும் மெக்சிகோவில் ஏராளமான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் உள்ளன. இந்த கடத்தல் கும்பல்கள், தங்களுக்குள் ஏற்படும் வியாபார போட்டி காரணமாக அடிக்கடி மோதல்கள் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இவர்கள் நடத்தும் துப்பாக்கி சண்டையில் ஏராளமானோர் பலியாவதும் வழக்கம்.
இந்த நிலையில் நேற்று குயின்டனாரோ மாகாணத்தில் முக்கிய கடற்கரை சுற்றுலா தளமான துலும் நகரில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இங்கு ஏராளமான தெருவோர உணவு விடுதிகள் அமைந்துள்ளன, அதில் ஒன்றில்தான் போதை மருந்து கும்பல்கள் மோதியுள்ளனர். அப்போது இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதில் 2 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் ஜெர்மனியை சேர்ந்த பெண்மணி என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இந்தியரின் பெயர் என்ன..? எதற்காக அங்கு சென்றார்..? என்பது குறித்த விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.