தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா. அதன் பிறகு ஜெயலலிதாவின் நினைவு தினம் கடந்த 5-ம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில், வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிமுக கட்சியின் நிறுவன தலைவரும் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் கடந்த 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி மறைந்தார்.
இவருடைய 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். இதைத்தொடர்ந்து தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் என பலரும் மரியாதை செலுத்துவார்கள். இதனையடுத்து எம்ஜிஆர் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதேப்போன்று ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் அறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது