மிடில் கிளாஸ் பெண்கள் வாழ்க்கை குறித்தும், சாதிய வன்மங்களுக்கு எதிராகவும் அதுல்யா ரவி பேசிய வசனங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான சாட்டை திரைப்படம் பள்ளி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு படமாக அமைந்தது. இது தமிழக மக்களிடையே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து கல்வி ரீதியாக அடுத்த சாட்டை என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.
வெளியான நாள் முதல் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடித்த சமுத்திரகனி உள்ளிட்டோர் நல்ல சமூக கருத்துக்களை தங்களது அருமையான வசனங்கள் மூலம் மக்களிடையே கொண்டு சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அதை அவர்கள் மனதிலும் பதிய வைத்து விட்டனர் என்றே சொல்லலாம்.
குறிப்பாக படத்தில் கதாநாயகியாக நடித்த அதுல்யா ரவி திரைப்படக் காட்சி ஒன்றில் மாணவர்கள் சாதி ரீதியாக மோதிக்கொள்ளும் பொழுது ஆவேசமாக அவர் பேசிய பேச்சு சாதிய பெருமைக்கும் அதனால் ஏற்படுத்தப்படும் வன்மங்களுக்கும் சாட்டையடி கொடுத்தது போல் இருந்தது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக ஒரு சிறு கனலாக அதுல்யா ரவி அவர்கள் பேசிய வசனம் பார்க்கப்படுகிறது.
மேலும் மிடில்கிளாஸ் பெண்கள் தங்களது படிப்பை முடிப்பதற்குள் எத்தனை இன்னல்களை சந்திக்கின்றனர் என்பதையும் அழகாக அவர் சுட்டிக்காட்டி பேசியிருப்பது இன்றைய கல்லூரி மாணவர்களிடம் பெண்கள் பற்றியும், காதல் பற்றியும் ஒரு நல்ல மனபக்குவத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றி பெறும் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.