Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மீன்பிடி திருவிழா…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. 17 பேர் மீது வழக்கு பதிவு….!!

தடையை மீறி அணையில் மீன்பிடித் திருவிழா நடத்திய குற்றத்திற்காக மீனவர் சங்க தலைவர் உட்பட 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூளாங்குறிச்சி பகுதியில் மணிமுத்தா அணை அமைந்திருக்கிறது. இந்த அணையில் வருடம் தோறும் மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த வருடமும் மீன்பிடித் திருவிழா நடக்க கிராம மக்கள் முடிவு செய்திருந்ததால் கொரோனா காரணத்தினால் இதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் மக்களிடையே மீன்பிடி திருவிழா நடத்த பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் 20-க்கும் அதிகமான கிராம மக்கள் பாத்திரங்கள், மிதவை மற்றும் மீன்பிடி வலையுடன் மணிமுத்தா அணை பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வந்து போட்டிபோட்டு மீன் பிடித்துள்ளனர்.

அப்போது முகவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் ஒன்றாக கூடி மீன்களை பிடித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் அணைக்கு விரைந்து சென்ற போது அங்கே ஏராளமான பொதுமக்கள் மீன்களைப் பிடித்துக் கொண்டு இருந்ததை பார்த்து திகைத்து நின்றுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை கதவைத் திறந்து தேங்கியிருந்த சிறிதளவு தண்ணீரையும் வெளியேற்றியுள்ளனர்.

இதனால் அணையில் தண்ணீர் குறைந்த காரணத்தினால் கிராம மக்களுக்கு மீன்பிடிக்க சுலபமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவில் கொண்டை, ஜிலேபி மற்றும் விரால் போன்ற பல வகையான மீன்களை பொதுமக்கள் பிடித்து கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீனவர் சங்க தலைவர் வெங்கடேசன் உள்பட 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 

Categories

Tech |