தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே ஷைனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. அந்த வகையில் தான் கடல் மூலமாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்து தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து வருகின்றது.
இதை தொடர்ந்து பாதுகாப்பு படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் குஜராத் அருகே உள்ள பகுதியில் சர் கிரீக் என்ற இடத்தில் பல கைவிடப்பட்ட நிலையில் படகுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த படகில் பயணித்து யார் ? எங்கிருந்து இங்கே வந்து சேர்ந்தார்கள் என்ற கேள்விகள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் சர் கிரீக் பகுதிகளை உபயோகித்து இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனென்றால் பாகிஸ்தானிலிருந்து குஜராத் அரபிக் கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்துதான் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். எனவே தற்போது கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ராணுவ கமாண்டர்எஸ்.கே சைனி தெரிவித்துள்ளார்.