பால் விலை உயர்வை பலரும் அரசியல் ஆக்கி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்ததை பாராட்டி பாஜக பிரமுகர் ராஜலட்சுமி மந்தா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வந்த அவரை பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் ராஜலட்சுமி மம்தாவின் இருசக்கர வாகனத்தில் தமிழிசை சிறிது தூரம் ஹெல்மெட் அணிந்து பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளார்களை சந்தித்த தமிழிசை 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மோடியை எதிர்த்தவர்களும் தற்போது அவரை ஆதரித்து வருவதாகவும் கூறினார். பாலின் விலை உயர்வை சிலர் அரசியல் ஆக்கி வருவதாக குற்றம் சாட்டிய அவர், விலை உயர்வால் பொதுமக்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இருந்தால் பாதிப்பு இருந்திருக்காது என்றும் கூறியுள்ளார்.