மீன் குட்டையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் பஞ்சம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடைசி மகனான பாஸ்கர் என்பருடன் பஞ்சம்மாள் வசித்து வந்துள்ளார். அதன்பின் பாஸ்கர் தனது வீட்டின் பின் புறத்தில் மீன் குட்டை ஒன்றை அமைத்து அதில் மீன்களை வளர்த்து வருகின்றார்.
இதனை அடுத்து மீன் குட்டை இருக்கும் இடத்திற்கு அடிக்கடி பஞ்சம்மாள் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பின்னர் அவர் மீன் குட்டை ஒட்டி நடந்து சென்று கொண்டிருக்கும் போது கால் தவறி உள்ளே விழுந்துள்ளார். அந்நேரம் அங்கு யாரும் இல்லாத சமயம் என்பதினால் தண்ணீரில் தத்தளித்த பஞ்சம்மாள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரமாகியும் தனது தாயை காணவில்லை என்பதினால் பாஸ்கர் அவரை தேடிய போது குட்டை அருகே சென்று பார்த்ததில் பஞ்சம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஞ்சம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.