மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் புதுபத்தூரில் உள்ள குளத்தில் கிராம மக்கள் மீன் பிடித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் கிராமத்திற்குத் தேவையான பொதுவான செலவிற்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளரும், ஒன்றிய கவுன்சிலருமான நடராஜன் அந்தக் குளத்தை தனது ஆக்கிரமிப்பில் வைத்துக் கொண்டதாகவும், வேறு யாரும் மீன் பிடிப்பதற்கு அனுமதி இல்லை என்றும் கூறியதாக தெரிகின்றது. இந்நிலையில் புதுப்பத்தூர் வடக்குத் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரையன் குளத்தில் இறங்கி மீன் பிடித்துள்ளார். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் யாரை கேட்டு குளத்தில் மீன் பிடிக்கிறாய் இந்த குளம் தனக்கு சொந்தமானது என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடராஜன் அரிவாளை வைத்து வீரையனின் கையில் வெட்டி விட்டார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று வீரையனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் வீரையனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் திரண்டு நடராஜன் வீடு மற்றும் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட டிராக்டர், மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர். இதனைதொடர்ந்து அங்கு கூடுதல் காவல்துறையினர் திரண்டு வந்து பொது மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார். அதன்பின் தாலுகா காவல்துறையினர் கொலை முயற்சி, அவதூறான வார்த்தையால் திட்டுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் நடராஜனை கைது செய்தனர். மேலும் புதுபத்தூர் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நடராஜன் வீட்டிலிருந்த டிராக்டர் மற்றும் வாகனங்களை நாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரின் உறவினர்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.