கம்போடியா நாட்டில் கண்ணி வெடிகள் மற்றும் வெடி பொருட்களை கண்டறிய உதவி வந்த பெரிய வகை எலிக்கு பணிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
7 வயது நிரம்பிய இந்த எலியின் பெயர் மகாவா. இதுவரை 71 கண்ணி வெடிகளையும், 12 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கண்டறிந்துள்ளது இந்த எலி. மகாவாவின் இந்த சேவைக்கு துணிச்சல் மிக்க விலங்கு என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. உருவத்தில் மிகச்சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரைக் காத்த மகாவாவுடன் பயணித்தது மிகவும் பெருமை என அதனைப் பராமரித்து கையாண்டு வந்த மலென் கூறியுள்ளார். மகாவா இதுவரை கம்போடியாவில் 1,41,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பகுதிகளை சோதனை செய்துள்ளது. ஏராளமான உயிர்களை இந்த எலி காப்பாற்றியுள்ளது.
இந்த எலி 2014இல் தான்சானியாவில் பிறந்து, 2016 ஆம் ஆண்டு கம்போடியாவில் குடிபெயர்ந்தது. அது பணிகளை சிறப்பாக செய்து முடித்து இன்று ஓய்வு பெறுகின்றது. அப்போபோ என்ற நிறுவனம் இதற்கு என்று தனியாக விலங்குகளை வளர்த்து வருகின்றது. ஆப்பிரிக்காவில் இருக்கும் மாபெரும் எலிகளுக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற எலிகளுக்கு போரில் எஞ்சியிருக்கும் வெடிபொருட்களை அகற்றுவதற்கான பயிற்சியை தருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.