மினி பஸ் ஸ்கூட்டரில் மோதிய விபத்தில் தாய் முன் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி பலவஞ்சிப்பாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தக்சனா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தீபா தனது மகள் தக்சனாவுடன் பூம்புகார் நகரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பல்லடம் சாலையில் தீபா வந்து கொண்டிருந்தார். அப்போது தீபா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடந்து ஒரு பேக்கரிக்கு முன்பு வந்த போது திருப்பூர் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்ற மினி பஸ் ஒன்று இவரது ஸ்கூட்டரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தீபாவும், தக்சனாவும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில் சிறுமி தக்சனா பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தீபா காயத்துடன் உயிர் தப்பினார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் தீபாவை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மினி பஸ் டிரைவரான தாராபுரம் பகுதியில் வசிக்கும் அர்ஜுன் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.