மினி லாரி கார் மீது மோதிய விபத்தில் கலெக்டர் உயிர் தப்பிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் சிவராசு என்பவர் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பங்கேற்று விட்டு இரவில் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டார். அந்த காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து கார் தாசநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதன்பின் சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அப்போது திடீரென லாரியின் டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து தாசநாயக்கன்பட்டி பகுதியில் சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கம்பியில் மோதியது.
மேலும் அந்த மினி லாரி சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசைக்கு திரும்பியபோது அவ்வழியாக வந்த கலெக்டரின் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதம் அடைந்து காணப்பட்டது. இதில் கலெக்டர் சிவராசு உயிர் தப்பி விட்டார். மேலும் கலெக்டரின் கார் டிரைவர் சீனிவாசன் , உதவியாளர் பெரியண்ணன் சாமி மற்றும் மினி லாரி டிரைவர் ஆகிய 3 பேரும் காயமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.