வேலூர் அருகில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் விநாயகம், மணிவண்ணன் போன்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த ஒரு மினி லாரியை அதிகாரிகள் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் டிரைவர் முரண்பாடாக பதில் கூறியதால், போலீசார் அந்த மினி லாரியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் மினிலாரியில் 200 பண்டல்களில் 3 டன் குட்கா புகையிலைப் பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் சுமார் 16 லட்சம் மதிப்புள்ள அந்த புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து மினிலாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் கே. எச். எம் பிளாக் பகுதியில் வசித்து வரும் சைமன் மகன் வெங்கடேஷ் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவருடன் இருந்த மற்றொரு நபர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஊனத்தூர் கிராமத்தில் வசித்து வரும் தங்கராசு மகன் சூரியமூர்த்தி என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து தடை செய்யப்பட்ட அந்த புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வெங்கடேஷ் மற்றும் சூரிய மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.