அமைச்சர் காமராஜரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜர் கடந்த ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து பொங்கல் பண்டிகை சொந்த ஊர் சென்று திரும்பிய அமைச்சருக்கு மீண்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவரை மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்து வந்தனர். தொடர்ந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சரின் உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி அமைச்சர் காமராஜர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.