விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் நிர்மலா தேவிக்கு நீதிமன்ற பிணை கிடைத்தது. தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் கடந்த 18ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்த நீதிபதி அவருக்கு எதிராக பிடிஆணை பிறப்பித்தார். இதனால் சிபிசிஐடி காவலர்கள் நிர்மலா தேவியை இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த நிர்மலா தேவி கதறி அழுதபடி வெளியே வந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன், நிர்மலா தேவியை ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக தெரிவித்தார்.
அந்த அமைச்சர் பாதி நாட்கள் சாமியார் போலவும், மீதி நாட்கள் சாதாரணமாகவும் இருப்பவர் என்றும் மறைமுகமாக நிர்மலா தேவியின் வழக்குரைஞர் கூறினார். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிர்மலா தேவியை நான் அழைத்து வந்த போது, காவலர்கள் கைது செய்து விட்டனர் என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.