Categories
அரசியல் மாநில செய்திகள்

‘திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும்’ – ஜெயக்குமார் விமர்சனம்..!!

அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பெண்களுக்காக தனிப்படை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனவும் 27 தலைமுறைகளாக படைப் பொறுப்பில் அவரது குடும்பம் இருந்ததாகவும் புகழாரம் சூட்டினார்.

அதைத் தொடர்ந்து திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவை விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் என்றார். மேலும், அதிமுகவை விமர்சிக்கும் துரைமுருகன் முடிந்தால் திமுக தலைவராகி காட்டட்டும் என்றும் சவால்விட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் வேண்டாம் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு எனவும், மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியதால் அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றும் உறுதியளித்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெயக்குமார் உறுதியளித்தார்.

Categories

Tech |