Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை ஏன் தேய்பிறை என்று கூறினேன்?… அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

திமுகவை தேய்பிறை என்று கூறியதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளையும், உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளையும் கணக்கு வைத்துப் பார்த்தால் திமுக வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதை வைத்துதான் திமுகவை தேய்பிறை எனத் தெரிவித்ததாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இதேநிலை நீடித்தால் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்றார். அதேபோல், டிஎன்பிஎஸ்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் எனவும், ஏழு பேர் விடுதலை விவகாரம் குறித்து தகவல் கிடைத்தால் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரண்டு பதவிகளில் ஆளும் அதிமுக கட்சியைவிட, எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களை வென்றது.

இது குறித்து முன்னதாக சில நாள்களுக்கு முன்னர் ஜெயக்குமார், திமுக பெற்றது மகத்தான வெற்றியில்லை எனவும், அக்கட்சி தேய்பிறையாகவும் அதிமுக வளர்பிறையாகவும் இருப்பதை உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமாரின் இந்தக் கருத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல் ஆகியவைகளில் திமுக வென்றதுடன் தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களை வென்றிருப்பதாகக் கூறி பதிலளித்தார். இருவரும் மாறி மாறி விமர்சித்தவந்த நிலையில், தற்போது திமுகவை தேய்பிறை என்று கூறியதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

Categories

Tech |