பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.
இந்நிலையில் இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி. தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். ஐ.நா.விலும் தமிழை மேற்கோள்காட்டி உரையாற்றி சிறப்பு சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி. அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்யப்படுகிறது. ட்விட்டரில் ட்ரென்ட் செய்வதை வைத்து பிரதமர் அல்லது முதல்வரை எடைபோட்டு விடமுடியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.