தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பதிலளித்தார். திமுகவின் கபட நாடகங்கள் எடுபடாது என அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூரில், அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியது:- அதிமுகவில் சசிகலா இணைய வேண்டுமென குருமூர்த்தி கூறியது தொடர்பாக நீங்கள் கேட்கிறீர்கள், அது அவருடைய கருத்து. அதற்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக தனித்தன்மையுடன், யார் எதிர்த்தாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் நிறைவேற்றிய நலத் திட்டங்களால் அதிமுகவின் வாக்கு வங்கி பலமடங்கு உயர்ந்துள்ளது. மேலும் அவர் ஆற்றிய திட்டங்களான அம்மா மினி கிளினிக், அம்மா நகரம் ரேஷன்கடை போன்ற எண்ணற்ற திட்டங்கள் மக்களிடையே அதிமுகவை கொண்டு சேர்த்துள்ளது.
கொரோனா காலத்திலும் மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் என முதலமைச்சர் தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கியதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏளனம் செய்கிறார். அவர், திமுக ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார். ஆனால் யாரும் எதையும் மறக்கவில்லை. திமுக ஆட்சியில் மக்கள் சந்தித்த பிரச்சனைகளை கிராமந்தோறும் விளக்கிக் கூறி திமுகவை விரட்டியடிப்போம் என்று நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வோம். விவசாயிகளின் 6,000 கோடி கூட்டுறவு கடனை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்தார். திமுகவை நம்பி மீண்டும் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பொய் பிரச்சாரம் மற்றும் கபட நாடகங்கள் எடுபடாது. அதிமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். அவர் தலைமையில் அதிமுகவின் நல்லாட்சி தொடரும். என அவர் கூறியுள்ளார்.