கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார். அரசின் வேண்டுகோளின் படி, மத்திய மற்றும் மாநில அரசுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், மாநில அரசுக்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் என மொத்தம் 1.25 கோடி வழங்கினார் தல அஜித் குமார். நடிகர் அஜித் 1.25 கோடி வழங்கியதை அவரது ரசிகர்கள் நேற்று #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து புகழ்ந்தனர்.
இந்தநிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு நன்றி, தெரிவித்துள்ளார். மேலும் அவரை போல அனைத்து நடிகர்களும் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.