திருப்பத்தூர் நகர கழகம் சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் விழா, திருப்பத்தூரில் நடைபெற்றது. விழாவில் வணிகவரி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கருணாநிதி அன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது 100 நாட்கள், 200 நாட்களில் கலைந்து விடும் என்று கூறினார். அது போலவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலின், தனது அப்பா போலவே கூறி வருகிறார்”, என்றார்.
மேலும், “திமுக கட்சியை தீய சக்தி என்று எம்ஜிஆர் கூறினார். அவர் வளர்த்த அதிமுகவை இன்று தினகரன், திமுகவோடு கைகோர்த்து அழிக்க நினைக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. நடிகர்கள் எல்லாம் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள். முதலில் எம்ஜிஆரின் படத்தை பார்த்து விட்டு வந்து முதலமைச்சராக ஆசைப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.