பொது இடத்தில் வைத்து அரசு பெண் ஊழியரை அமைச்சர் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அரசு உத்தரவுப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் தமிழகம் முழுவதிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பினை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பங்கேற்று பரிசு தொகுப்பை வழங்கினார்.
அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஐந்து பயனாளிகளை தங்களுடன் அழைத்து வந்தனர். இந்நிலையில் மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த உசிலம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பெண் ஊழியர் ஒருவர் தான் அழைத்து வந்த பயனாளிகளை வரிசை படுத்துவதற்காக அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்துள்ளார்.
இதனை பார்த்து கோபமுற்ற அமைச்சர் “யாருமா நீ? நல்லா பேசிட்டு இருக்கும்போது எழுந்து போற, உனக்கும் எங்களுக்கும் ஏதேனும் வாய்க்கா தகராறா? எதுவானாலும் கூட்டம் முடிந்த பிறகு பேசுமா” என கோபத்துடன் கூறியுள்ளார். இதனை எதிர்பார்க்காத அந்த பெண் அழத் தொடங்கி விட்டார்.