நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை தன்னிடம் நேரடியாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
நிவர் புயலினால் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில பகுதிகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கூவம் நதிக்கரை ஓரமாக அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முழங்கால் அளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருப்பதைப் பார்த்து அதிகாரிகளுக்கு உடனடியாக மழைநீரை அகற்றுவதற்கு உத்தரவிட்டார். அதோடு மழை நீர் சூழ்ந்திருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீர் வடிந்த பிறகு வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் “அம்மா உணவகம், மருத்துவ குழு, படகு போன்றவை எப்போதும் தயார் நிலையில் தான் உள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் உதவி எண்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்கள் எனக்கு நேரடியாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பிரச்சினையை தெரிவிக்கலாம்” எனக்கூறி தனது செல்போன் நம்பரை பகிர்ந்துள்ளார்.