Categories
மாநில செய்திகள்

கொரோனா விளைவுகள் குறித்து அறியாமல்… மக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது. அரசின் எச்சரிக்கையையும் மீறி, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது கவலையளிக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். தேவையற்ற பயணங்களை தவிர்த்து, கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

மேலும் டெல்லியில் இருந்து சென்னை வந்த வடமாநில நபருடன் தொடர்பில் இருந்த 163 பேரை கண்டறிந்துள்ளோம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் கொடுத்துள்ள அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளை அதிகரித்து, தேவையான மருத்துவ வசதிகளை செய்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனாவை எதிர்கொள்ள 500 வெண்ட்டிலேட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அதிக விலைக்கு முககவசங்களை விற்ற 31 மருந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் விற்பனை செய்பவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Categories

Tech |