வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் AC சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை அரசியல் கட்சிகள் சந்திக்கின்றன.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த்_தும் , அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் AC சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர்கள் செங்கோட்டையன் , உடுமலை இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.