தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது
கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சரின் உடல்நிலையை கண்காணிக்க சிறப்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டு, அவரது உடலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அமைச்சர் உடல் நிலை தொடர்ந்து மோசமானதையடுத்து தமிழக அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று துரைக்கண்ணு சிகிச்சை குறித்து நலம் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சியாக அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் அதிமுகவிற்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.