மினி வேனில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லேரிபட்டு காலனி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி நடுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் மினிவேனில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்துள்ளார். இந்த வேனில் ஏறிய சங்கர் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் சங்கரை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சங்கரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.