திருவள்ளூரில் , கும்மிடிப்பூண்டி பகுதியில் மின் கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி, கொத்தனார் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய தங்கராஜ் . இவர் அந்தப் பகுதியில் ஆத்துமேடு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கொத்தனாராக பணியாற்றும் இவர், நேற்று மங்கலத்தில் இருந்து ஆத்துமேடு கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியுள்ளது.
மின் கம்பத்தில் வேகமாக மோதியதால், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த தங்கராஜ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார் . இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ஆரணி பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயவேல், தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.