மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூரை சேர்ந்தவர் சுதாகர். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் . நேற்று நள்ளிரவு திடீரென இவரது வீட்டில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளித்தனர் .தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் தீயில் எரிந்தது .
திடீரென ஏற்பட்ட இந்த தீவிபத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக சுதாகர் ஆட்டோவை விற்று வைத்திருந்த பணம் ரூபாய் ஒன்றரை லட்சம் மற்றும் புதிய வீட்டுமனை பத்திரமும் தீயில் எரிந்து சாம்பலானது . மேலும் ஐந்து சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது . இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.