மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இவருக்கு சுடலி என்ற மனைவியும், 2 மகன்களும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை அனுமார் புதுக்குளம் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது.
இந்நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சுடலை சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மூலக்கரைப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடலையின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.