அதிகாரிகள் மைனர் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரசனூர் பகுதியில் நாராயணசாமி என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய மைனர் பெண்ணுடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்த போது, மைனர் பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதாக விழுப்புரம் சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் மணமக்களின் வீடுகளுக்கு சென்று விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் மணப்பெண்ணிற்கு இன்னும் 18 வயது நிறைவடையவில்லை என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 18 வயது நிரம்பாத மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்றும், அதை மீறி திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் இரு குடும்பத்தினரையும் எச்சரித்துள்ளனர். அதன் பிறகு திருமணத்தை நிறுத்துவதற்காக இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சமூகநலத்துறை அலுவலர் பத்மாவதி மற்றும் விமலா ஆகியோர் அந்த மைனர் பெண்ணை ஒப்படைத்து விட்டனர்.