Categories
தேசிய செய்திகள்

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீட் தேர்வு தொடர்பான அரசாணையை 2010ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தாண்டியும் 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2010ல் அந்த அறிவிப்பாணையை எதிர்த்து பல்வேறு சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் கோரிக்கை வைத்தது.

இது தொடர்பான அனைத்து வழக்குகளும் கடந்த 2012ம் ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளில் பல்வேறு விசாரணைகள் நடைபெற்ற போதிலும் நீட் தேர்வு நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என உச்சநீதிமன்றம் நிலையாக இருந்தது. இந்த நிலையில் இந்த வழங்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீட் தேர்வு முறை சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை என வேலூர் சிஎம்சி உள்ளிட்ட சிறுபான்மையினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் தேச நலனை மேம்படுத்த மருத்து கல்வி, தரமுடன் இருக்க வேண்டும். தரமான கல்வி என்பதில் எவ்வித சமரசமும் இருக்க கூடாது. மருத்துவ படிப்பு வியாபாரம் ஆக்கப்படுவதை தடுக்க நீட் தேர்வு கட்டாயம் என கூறி நீட் தேர்வு தொடர்பான அனைத்து மனுவும் முடித்து வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Categories

Tech |