மின்சாரம் தாக்கியதில் தந்தை-மகன் 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவியார்பாளையத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு கவின் என்ற மகனும், பிரீத்தி என்ற மகளும் இருந்தனர். இவர்களில் கவின் பி.காம். பட்டதாரியாக இருந்துள்ளார். இதனையடுத்து மகேந்திரன் 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பங்கி செடி சாகுபடி செய்திருந்தார். இதனால் தந்தைக்கு உதவியாக அவரது மகன் கவின் என்பவரும் தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில் மகேந்திரன் தோட்டத்திற்கு பூப்பறிக்கச் சென்றபோது மின்சார ஒயர் தரையில் கிடந்தது. அதை அறியாமல் மகேந்திரன் ஒயரை கால்களால் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
அதன்பின் தந்தை தோட்டத்திற்குச் சென்று வெகு நேரமாகி விட்டதே என்று கவின் அங்கு சென்றுள்ளார். அங்கு மின்சாரம் தாக்கி தந்தை இறந்து கிடந்ததை பார்த்து கவின் அதிர்ச்சியடைந்தார். இதனைதொடர்ந்து கவின் தனது தந்தை மீது கிடந்த ஒயரை அகற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக கவின் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தை- மகன் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.