மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாவூர் பகுதியிலுள்ள சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் தேவா (45). இவர் திருவொற்றியூர் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு அங்குள்ள வீடுகளுக்கு மின்சார விநியோகம் தடையானது. இது குறித்த தகவலின் பேரில் தேவா மற்றும் சக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அங்கு பூமியில் பதிக்கப்பட்டிருந்த மின் வயர் பழுதாகி இருந்ததால் அதனை அகற்றிவிட்டு புதிய மின் வயரை பொருத்த துளை போடும் எந்திரம் கொண்டு தேவா துளையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனை கொண்டு சென்றனர். ஆனால் தேவா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.