மின்சாரம் தாக்கி ஊர்க்காவல்படைவீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேம்பக்குடி கிராமத்தில் சத்தியவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது ஸ்ரீரங்கம் என்ற கணவர் உள்ளார். இவர் தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஊர்க்காவல் படைவீரரான மதன் என்ற மகன் உள்ளார். இவர் அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் அய்யம்பேட்டை வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேம்பக்குடி சமுதாய கூடம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கிருந்த சமுதாய கூடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து மழை ஓய்ந்த பிறகு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மதன் கால் அருகில் இருந்த உயர் கோபுர மின் விளக்கின் கம்பத்தில் பட்டது. அப்போது மின் கம்பத்தில் இருந்து மதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மதனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்னர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அய்யம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.