மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரல் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் அருகில் இருந்த மின்சார கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சுரேஷின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காலையில் சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் திரண்டு மின்சாரம் தாக்கி இறந்த சுரேஷின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.