மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லை சந்திப்பு பகுதியில் தி.மு.க. நிர்வாகியான மலைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொம்பையா என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை சந்திப்பில் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொம்பையா தனது வீட்டில் குளித்துவிட்டு ஈரத்துணியை இரும்பு கொடியில் காயப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கொம்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொம்பையாவின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.