மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் விவசாயியான பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் பழனிக்குமாருக்கு வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள மன்னார் பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு அவர் வாழைகளை பயிரிட்டு இருந்தார். மேலும் பழனிகுமாரின் தோட்டத்தில் வன விலங்குகள் புகுந்து சேதப்படுத்தாத வகையில் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு அதில் மின்சாரமும் பாய்ச்சப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது தோட்டத்திற்கு சென்ற பழனிகுமார் எதிர்பாராதவிதமாக மின்கம்பி வேலியில் தவறி விழுந்தார்.
இதனால் பழனி குமார் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்பார்த்த அருகிலுள்ளவர்கள் களக்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற களக்காடு காவல்துறையினர் பழனி குமாரின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து களக்காடு நகர்ப்புற மின்வாரிய உதவி பொறியாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.