ஒட்டன்சத்திரம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது பத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் முதல் செம்பட்டி வரை ஒருவழி சாலை, இருவழி சாலையாக மாற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய தர சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலைகள் சிராபுரம் அருகே உள்ள அரச மரத்து பட்டி மற்றும் இரட்டை வேப்பமர பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியின் போது ஊழியர்களின் அலட்சிய போக்கால் மின்கம்பத்தின் மீது வாகனம் மோதி சுமார் பத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதிகளில் உள்ள பல இடங்களில் மின் துண்டிக்கப்பட்டதால் விவசாயிகள் காலிபிளவர் மற்றும் வெண்டை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இரண்டு தினங்களுக்கு மேலாக அவதிப்பட்டு வருகின்றார்கள். இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.