தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது. இத்திட்டத்தில் மீனவர்கள், மீன் வளர்ப்போர் சுய உதவி குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பொதுப்பிரிவினருக்கு 25% மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பில் மானிய தொகையின் உச்சவரம்பு 1 கோடியே 25 லட்சம் ரூபாய்) மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30% மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்சவரம்பு 1 கோடியே 50 லட்சம் ரூபாயும் கொடுக்கப்படும். எனவே இதன் மூலம் பயன் பெற விரும்புபவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை என்ற www.fisheries.tn.gov.in இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதனை விண்ணப்பிப்பதற்கு 31-ம் தேதி கடைசி நாள் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.