மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மின்சார வாரியம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட இணைச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜாமணி, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பையா, துணை தலைவர் தியாகராஜன் மற்றும் இணைச் செயலாளர் சீனி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். அதில் 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத் திட்டத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், 1.1.2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருத்துவ செலவு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் இணைச் செயலாளர் இசக்கி, சண்முகத்தாய், துணைத் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.