மின்வேலியில் சிக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கெட்டிச்செவியூர் கும்மிபனை பகுதியில் ஆண்டியப்பன்- முனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு வெங்கடாசலம் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருக்கின்றார். இவர்களில் ஆண்டியப்பன்- முனியம்மாள் இருவரும் சேர்ந்து வீட்டின் அருகில் பண்ணை அமைத்து சுமார் 40-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோழியை திருடி சென்று விட்டனர்.
ஆகவே கோழி திருட்டு போவதை தடுப்பதற்காக ஆண்டியப்பன்- முனியம்மாள் இருவரும் சேர்த்து பண்ணையை சுற்றி மின்வேலி போட்டுள்ளனர். இந்நிலையில் முனியம்மாள் தீவனம் வைப்பதற்காக கோழி பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக முனியம்மாள் மின்வேலி கம்பியை தோட்டபோது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் முனியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஆண்டியப்பன் ஓடி வந்து பார்த்தார். இதனையடுத்து ஆண்டியப்பன் மனைவி முனியம்மாளை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
அதன்பின் கணவன்- மனைவி 2 பேரின் அலறல் சத்தம் கேட்டு பேத்தி சவுமியா அங்கு வந்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தார். அப்போது வெங்கடாசலம் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தார். ஆனால் அதற்குள் ஆண்டியப்பனும், முனியம்மாளும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்-மனைவி 2 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.