மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாயாகுளம் பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயந்தி கோபித்துக்கொண்டு இரவில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பின் நீண்ட நேரமாகியும் ஜெயந்தி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஜெயந்தி அப்பகுதியில் உள்ள சுந்தரம் என்பவரது விவசாய நிலத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது ஜெயந்தியின் கையில் நெல்மணிகள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஜெயந்தியின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் காவல்துறையினர் நெல் பயிர் பயிரிடப்பட்ட நிலம் எங்குள்ளது என பார்த்தபோது ஜெயந்தி இறந்து கிடந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்ததற்கான அடையாளம் தெரிந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜெயந்தி மின்வெளியில் சிக்கி உயிரிழந்ததும், காவல்துறையினர் வருவதை அறிந்த நிலத்தின் உரிமையாளர் உடனடியாக மின்வேலியை அகற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும் இறந்த ஜெயந்தியின் உடலை அங்கிருந்து எடுத்து அருகிலுள்ள நிலத்தில் போட்டதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்ததற்காக பால கிருஷ்ணன், அவரது மகன் சந்திரசேகரன், சந்திரசேகரனின் மனைவி மஞ்சுளா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.