தஞ்சாவூரில் உள்ள மிக முக்கியமான சாலையில் மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி சாலையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 14 மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் மட்டும் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து அந்த வழி சாலையில் வரும் பொதுமக்கள், இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இந்த இருளடைந்த பகுதியின் வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதி இருளடைந்து காணப்படுவதால் அங்கு நடந்து செல்லும் மக்களுக்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது தெரியாமல் விபத்துகள் ஏற்படுவதற்கும், மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
அதே போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படும் பகுதியில் உள்ள மின் விளக்குகளும் எரியாமல் உள்ளது. இந்நிலையில் அந்த சாலையில் தாழ்வான இடங்களும் இருப்பதால் இரவில் பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த வழி சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மிகவும் முக்கிய சாலையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் சாலையிலும் எரியாத மின்விளக்குகளை உடனே சரி செய்து தர மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சார்பாக வலியுறுத்தியுள்ளனர்.