பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வந்தது. இந்த பதவிக்கு பல முன்னாள் வீரர்கள் போட்டியிட்டு, அவர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இந்த பட்டியலில் முதலிடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மிஸ்பா – உல்-ஹக் (misbah-ul-haq) பெயர் இருந்தததால், அவரை தேர்வுக்குழு தலைவராக நியமிக்கும் திட்டம் உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்ந்து பந்து வீச்சு பயிற்சியாளராக வக்கார் யூனிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி மிஸ்பா கூறுகையில், இது மிகவும் சவாலான பதவி என்றாலும் நான் இதற்கு தயாராக இருக்கிறேன். பாகிஸ்தானில் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து சிறப்பாக விளையாட உதவி செய்வேன். அத்துடன் வக்கார் யூனிஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் பதவிகளை ஏற்கனவே வகித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.