பயமறியா மன்னனாகத் திகழ்ந்த பிருத்விராஜ் செளகான் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரை தலைநகராக கொண்டு ஹரியானா, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளை ஆண்ட சஹமன வம்சத்தின் மன்னரான பிருத்விராஜ் செளகான் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பிருத்விராஜ் என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படம் உருவாகிறது.
பயமறியா மன்னன் என்று புகழப்பட்ட மன்னர் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் நடிக்கிறார். கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் பக்ஷிராஜன் என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டிய இவர் தற்போது பிருத்விராஜ் செளகான் என்ற மன்னராகத் தோன்றவுள்ளார்.
மன்னரின் காதல் மனைவி சன்யோகிதாவாக, உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லார் நடிக்கவுள்ளார். இந்தப் படம் மூலம் அவர் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் சந்திரபிரகாஷ் தவிவேதி இயக்குகிறார். இவர் புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடரான சாணக்யாவின் இயக்குநராவார்.
மனுஷி சில்லாரை கதாநாயகியாகத் தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சந்திரபிரகாஷ் திவிவேதி கூறியதாவது, பிரமிக்கவைக்கும் அழகான தோற்றத்திலிருக்கும் சன்யோகிதா கதாபாத்திரத்துக்காக இளம் புதுமுகங்கள் பலரை ஆடிஷன் செய்தோம். அழகு மட்டுமில்லாமல் வலிமை, நம்பிக்கை மிகுந்த கேரக்டராகவும் இருந்ததால் அதற்கு பொருத்தமான பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தோம். இவை எல்லாம் சேர்ந்து சுண்டியிழுக்கும் விதமாக மனுஷி சில்லார் இருந்தார். இந்தக் கேரக்டருக்காக அவரிடம் இருமுறை ஆடிஷன் நடத்தினோம். ஒவ்வொரு முறையும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவதுடன் சன்யோகிதா என்ற சிறப்பான கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து மனுஷி சில்லார், “எனது வாழ்க்கையே விசித்திரம் நிறைந்ததாக இருக்கிறது. முதலில் மிஸ் இந்தியா, அப்புறம் மிஸ் வேர்ல்டு, தற்போது மிகப்பெரிய படத்தில் அறிமுகம் என சந்தோஷமாக உள்ளது. என் வாழ்க்கையின் அற்புதமான அத்தியாயமாகத் திகழ்கிறது.
சன்யோகிதா சக்தி வாய்ந்த பெண்ணாக மட்டுமில்லாமல் தனது வாழ்வின் முக்கிய முடிவுகளை தானாகவே எடுத்து செயல்படுத்தியுள்ளார். அவரது கதை இந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அவரது கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் நிறுத்த முயற்சிப்பேன்” என்று கூறினார். பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப்படம் 2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.