கோவையில் சாதி மறுத்து திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த பிரபாவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார். இதற்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர்களை எதிர்த்து சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர்.
குறிப்பாக கார்த்திகேயன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் வந்த பெண்ணின் உறவினர் 10 பேர் கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று பிரபாவை அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். பிரபா வரமறுத்ததால் கார்த்திகேயனை மற்றும் அவரின் தாயை தாக்கிவிட்டு பிரபாவை தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.
தற்போது கார்த்திகேயனின் தாயார் தலையில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக ஏற்கனவே காவல்துறையில் அளிக்கப்பட்டிருந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 வீடியோக்கள் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கடத்தப்பட்ட பெண்ணை மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.